அருள்மிகு திருக்கேதீச்சர

அருள்மிகு திருக்கேதீச்சர திருக்கோயில்.

This is default featured slide 2 title

அருள்மிகு திருக்கேதீச்சர திருக்கோயில்.

This is default featured slide 3 title

அருள்மிகு திருக்கேதீச்சர திருக்கோயில்.

This is default featured slide 4 title

அருள்மிகு திருக்கேதீச்சர திருக்கோயில்.

This is default featured slide 5 title

அருள்மிகு திருக்கேதீச்சர திருக்கோயில்.

Wednesday, 22 June 2016

கேதீச்சர பாலாவிக் கரையில் மாதா சொரூபம் இந்து அமைப்புகள் அமைதி முறையில் ஆர்ப்பாட்டம்

ஈழத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தினால் அத்துமீறி அமைக்கப்படும் மாதா திருச்சொரூபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்ட இந்து சமய ஆலயங்களின் பிரதிநிதிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களின் மற்றும் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். முன்னதாக ஆலயத்தின் முன்வாயிலில் இருந்து திருவாசகம் ஓதலுடன் ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, பாலாவி தீர்த்தத்தை வந்தடைந்தது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத போதிலும் பொலிசார் பெருமளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டு இருந்ததோடு, குறித்த மாதா சொரூபத்திற்கு பாதுகாப்பு வழங்கியதனையும் காண முடிந்தது. இதனால் அமைதிவழியிலான கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்கள் அச்சமடைந்திருந்தனர். திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் பாலாவி தீர்த்ததிற்கு அருகாமையில் மாந்தை சந்தியில் உள்ள காணி ஒன்றில், குறித்த மாதா சொரூபத்தினை ஆலயத்திற்கு எவ்வித அறிவித்தல்லும் வழங்காமல் திடீரென குறித்த மாதா சொரூபம் சிலரால் அங்கு வைக்கப்படுள்ளது. குறித்த சொரூபம் வைப்பதற்கு முன்னர் சிரமதானம் என்ற பெயரில் மக்களை அழைத்து, காணியை துப்பரவு செய்துவிட்டு வேலி அடைக்க பயன்படுத்தப்படும் நான்கு தூண்களை நாட்டி அதற்கு மேல் மாதா சொரூபத்தினை அவசர அவசரமாக கம்பிகளால் வைத்து கட்டிவிட்டு சென்றுள்ளனர். சிலருடைய இந்த விசமத்தனமான நடவடிக்கையால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தமக்குள்ளே முரண்பட ஆரம்பித்துள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பிரச்சனை இந்து கிறிஸ்தவ பிரச்சனை அல்ல எனவும், இது சிலருடைய சுய நல நோக்கங்களுக்காக இரு மதத்தினரயையும் தூண்டி விடுவதற்காக திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட வேலை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த இடத்தில் ஏற்கனவே லூர்த்து மாதா ஆலயம் இருக்கும் போது, அதற்குள் மாதா சொரூபத்தை அமைக்காமல் பாலாவி தீர்த்த கரையோடு மடு மாதா சொரூபத்தை அமைப்பதற்கான நோக்கம் என்ன? என கேள்வியெழுப்பியுள்ள நேற்று கவனஈர்ப்பில் ஈடுபட்டிருந்த மக்கள், இந்து கிறிஸ்தவ மக்களை இதன் மூலம் மோத விட்டு குளிர் காயும் நபர்களை கிறிஸ்தவ தமிழ் சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அமைதி வழி கவனஈர்ப்பின் பின்னர் மன்னார் மாவட்ட இந்து கோவில்களின் பிரதிநிதிகளினால், குறித்த அத்து மீறல் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கை கையளிப்பது என முடிவெடுக்கப்பட்டு மதியம் பன்னிரண்டு மணியளவில் கவனயீர்ப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளை குறித்த சொருபம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை 24 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கனவான் ஒப்பந்தம் மீறப்படுவதாக குற்றச்சாட்டும் 
 மன்னார் இந்து மகா சபை 

இது தொடர்பாக ஏற்கனவே  இந்து மகாசபை வெளியிட்ட அறிக்கை ....




மன்னார் மாவடடத்தில் அமைந்துள்ள திருக்கேதீச்சர ஆலயம் இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்படட இந்துக்களின் புனித தலமாகும்.மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய 3ம் முறையாக பத்தி திருக்கேதீச்சரம் .கேது,மயன் ,மாதுவட்டா ,மண்டோதரி,இராமர்,அகத்தியர்,முதலான பெருந்தவத்தோர் இவ் ஆலயத்தினை வழிபட்டதாக  அறிகின்றோம்.

7ம்,8ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த திருஞான சம்பந்தமூர்த்தி,சுந்தரமூர்த்தி நாயன்மார்களினால் பாடல்பெற்ற இத்தலம் உலகம் முழுவதிலும் வாழ்கின்ற இந்துக்களினால் பூசிக்கப்பட்டு வருகின்ற மிகவும் அருள் மிக்க, புகழ்மிக்க கேதீச்சர ஆலயம் 1590ம் ஆண்டு போர்த்துக்கேயர் மன்னாரை கைப்பற்றியபோது உடைக்கப்பட்டு உடமைகளும் கொள்ளையிடப்பட் டன.

இதன் பின்னர் போர்த்துக்கேயர் இப் பகுதியில் ஒரு மாதா கோயிலை அமைத்துக் கொண்டனர்.போர்த்துக்கேயர் வருகையின் பின்னர் வருகை தந்த ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்தை சார்ந்தபடியால் மாதாவை  வழிபட விரும்ப வில்லை .இதனால் இங்கிருந்த மாதா சொரூபம் எடுத்து செல்லப்பட்டு மடுவில் வைத்து வணங்கியதாக கூறப்படுகின்றது.

1894ம் ஆண்டு திருக்கேதீச்சர ஆலயம் இருந்த இடம் கண்டறியப்பட்டு இப்பகுதியில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் பின் காலத்திற்கு காலம் புனரமைக்கப்பட்டும் வந்துள்ளது.கேதீச்சர ஆலயத்துக்கு செல்லும் பாதை திருக்கேதீச்சர கோயில் வீதி ஆரம்பத்தில் கிராம சங்கத்தினரால் பராமரிக்கப்பட்டு பின்னர் பொதுச் சேவை திணைக்களத்தினராலும்,பெருந்தெருக்கள் திணைக்களத்தினராலும்,வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் ,தற் சமயம் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினராலும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இப் பாதை மன்னார்-பூநகரி வீதியிலுள்ள மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீச்சர ஆலயத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.இப்ப பாதையில் மேற்கு புறமாக மன்னார் பூநகரி வீதியில் வடக்கு பக்கத்தில் 1950ம் ஆண்டில் கத்தோலிக்க மத குகைக்கோயில் அமைக்கப்படட பொழுது மன்னார் அதிகாரியினால் தடுக்கப்பட்டது.. அப்பொழுது யாழ் ஆயர் எமிலியானுப்பிள்ளை திருக்கேதீச்சர ஆலய திருப்பணித் தலைவர் சேர் கந்தையா வைத்தியநாதனுடன் தொடர்பு கொண்டு குகைக்கோயில் அமைக்க உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார்.
கேதீச்சர ஆலயத்திற்கு பெருமளவிலான யாத்திரிகள் செல்லும் பாதையில் ஒரு கத்தோலிக்க ஆலயம் நிறுவப்படும் இடத்தில் மத ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் இந்து மதத்தினர் இதனை எதிர்த்தனர்.

இவ் இடத்திலொரு குகை கோயில் அமைக்க கத்தோலிக்க மக்கள் முயற்சி எடுக்கும் பொழுது இதனை தடுப்பதினால் கத்தோலிக்க மக்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு உட் படுவார்கள் என்றும் இக் கோவிலுக்கு 1/4 அல்லது 1/2 ஏக்கர் காணிக்கு மேல் தேவைப்படாது எனவும் இதற்கான முகப்பு மன்னார் பூநகரி வீதியில் அமையும் எனவும் வணக்கத்துக்குரிய ஆயர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஆயர் அவர்களும் சேர் வைத்தியநாதன் அவர்களும் ஒரு கனவான் ஒப்பந்தத்தை 30.01.1964ம் ஆண்டு எழுதிக்கொண்டனர்.

திருக்கேதீச்சர ஆலய இரு மருங்கிலும் பொது வேலை,பகுதி வேலைத்தளம் தற்சமயம் வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமானநிலத்தை தவிர,மற்றைய பகுதிகளில் இந்து சமய மக்களுக்கும்,அவர்களுக்கு சொந்தமான பொதுக்கட்டிடங்களும் அமைந்திருந்தன.தற்பொழுது குகை கோயில் இருந்த இடத்திற்கு மேலதிகமாக உள்ள இடத்தில் பெரிய  மாதா ஆலயத்தை அமைத்து பழம் பெரும் புனித தலமான திருக்கேதீச்சர ஆலய முகப்பினை மறைக்கக் கூடிய விதத்தில் அமைந்துள்ளமை இந்து மக்களுக்கு மிகவும் மன வருத்தத்தை தருவதாக உள்ளது.

இதைவிட மேலும் கூடுதலான நிலங்களை பிடித்துக்கொண்டிருப்பது எழுதப்பட்ட  கனவான் ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.கேதீச்சர ஆலயத்தின் புனித தீர்த்தக்குளமாகிய பாலாவி குளமும் மாசடைய கூடியதாக இருக்கும் என கவலை அடைகின்றோம்.திருக்கேதீச்சர ஆலயத்தின் தொன்மையையும் புனித தன்மையையும் ஏற்று நடக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.












Tuesday, 17 February 2015

மஹா சிவராத்திரி உணர்த்தும் உண்மைகள்


ஆணவம் ஏற்படுத்தும் அறியாமை என்கின்ற செறுக்கு உள்ளவரை உயிர்கள் இறைவனின் திருவருளைப் பெறமுடியாது என்றும் இறைவனின் திருவடி இன்பத்தில் திளைக்க முடியாது என்றும் சிவராத்திரி நமக்கு உணர்த்துகின்றது. திருமாலும் பிரமனும் ஆணவச் செறுக்கினால் தர்க்கித்து இறைவன் திருவடியையும் இறைவன் திருமுடியையும் காண முயன்று சோர்ந்தனர் என்பது இதனையே உணர்த்துகின்றது. 

 அவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து அன்பினால் உருகி இறைவன் திருவருளை வேண்டித் தவமிருந்தபோது இறைவன் திருவருள் கிடைக்கப்பெற்றனர் என்பதும் கூறப்பட்டது. எனவே “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்று அடியார் பெருமக்கள் குறிப்பிடுவது போல அன்பினால் இறைவனை அடையலாம் என்று சிவராத்திரி உணர்த்துகின்றது. அன்றாட வாழ்வில் பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்று பல்வேறு அறியாமையால் தர்க்கித்துத் திரியும் நாம் சிவராத்திரியன்று இதை எண்ணிப் பார்க்க வேண்டும். 

நம்முடைய பணம், பதவி, படிப்பு, அழகு, அறிவு என்பதெல்லாம் கருணையினால் இறைவன் அளித்தது என்றும் அதனைக் கொண்டு இறைவனிடத்திலும் இறைவன் வாழ்கின்ற பிற உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டி உயிர் ஈடேற்றம் பெறுவதற்கு அவன் திருவருளை எண்ண வேண்டும் என்பதை அன்றைய தினம் எண்ணி எண்ணிப்பார்க்க வேண்டும். இறைவன் நமக்கு அளித்திருக்கின்ற குறுகிய வாழும் காலத்தைத் தற்காலிக உலக போகங்களை எண்ணிப்பார்த்து நம் ஆணவத்தை நீக்கி வாழ வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கணவன், மனைவி, மறுமகள், மாமனார், மாமியார், முதலாளி, தொழிலாளி, தலைவன், தொண்டன் போன்ற செறுக்குகளையெல்லாம் விட்டு இறைவன் திருவடிக்குச் செல்ல துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு உயிர் என்ற எண்ணத்தில் அன்பு பாராட்டும் இயல்பு வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி நிற்க வேண்டிய நாள் அது. இதனையே “ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்” என்று வள்ளல் பெருமான் வேண்டினார். 

 எனவே சிவராத்திரி என்பது வருடத்திற்கு ஒருமுறை ஆணவத்தினால் ஏற்படும் நம் அறியாமைச் செறுக்கினை எண்ணிப்பார்க்கின்ற நாளாய் அமைகின்றது. ஆணவத்தினால் நாம் செய்கின்ற அன்பில்லாச் செயல்களையும் வார்த்தைகளையும் எண்ணங்களையும் எண்ணிப்பார்த்து அவற்றைச் சரிப்படுத்துவதற்குறிய வழிவகைகளை ஆராயும் நாளாய் அமைகிறது. இறைவனை வழிபட்டு, அவன் திருவருளை வேண்டி நின்று, கண் விழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உயிரினை விழிப்படையச் செய்யும் நாளாகவும் விளக்குகின்றது. இவ்வளவு சிறப்புக்களையும் உண்மைகளையும் உணர்த்தும் உயரிய சிவராத்திரியை உரிய முறையில் உள்ளவாறு உய்த்து உணர்ந்து கொண்டாடுவோமாக!

Friday, 5 December 2014

தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை விழா

கார்த்திகை பெருநாளாம் தீபத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோயில்கள், வீடுகளில் தீபங்கள் ஏற்றப்பட்டு பிரகாசமாக ஜொலிக்கின்றன. இருள் விரட்டி ஒளி பாய்ச்சும் இந்த கார்த்திகை பெருநாள் பல்லாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சைவம், வைணவம், சமணம் என அத்தனையிலும் தீப வழிபாடு முக்கியப்படுகிறது.

 தென் தமிழகத்தில் 16 வகை தீப வழிபாடுகள் வழக்கில் உள்ளன. இவற்றில் ‘கார்த்திகை தீபமே’ சிறப்பிடம் பிடிக்கிறது. அன்றைக்கு இயற்கையோடு நம்மவர்கள் நெருப்பையும் வணங்கி வந்திருக்கின்றனர். அகநானூறு, தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரத்துடன் பொங்கையாழ்வார், ரகுவம்சத்தில் காளிதாசர், மாணிக்கவாசகர், வள்ளலார், அப்பர் பெருமான், திருமந்திரத்தில் திருமூலர் என பலரும், அத்தனை புராணங்களும் இந்த விளக்கு விழாவைப் பேசுகின்றன. 

அகல், எண்ணெய், திரி, சுடர் நான்கும் ஒன்றிணையும் போது ‘விளக்கு’ ஆகிறது. இவை அறம், பொருள், வீடு எனும் குறள் நெறியை உணர்த்துகிறது. இந்த அறவொளியே தீப சக்தியாக இந்நாளில் வழங்கப்படுகிறது. பிரம்மன், விஷ்ணுவிற்கு சிவனே முதல்வரென காட்டியது, முருகப் பெருமானின் பிறந்த தினம், அக்னி - சுவாகா தம்பதியர், சப்தரிஷி மங்கையர் பூஜித்தது, எலியாய் அவதரித்த மகாபலி சக்கரவர்த்தி வரம் பல பெற்றது, திரிசங்கு மன்னன் பகீரதனை வென்றது, பார்வதிக்கு சிவபெருமான் பாதி இடமளித்து அர்த்தநாரீஸ்வரராய் ஆக்கியது, மகிஷாசுரன் வதத்தின் போது சிதிலமடைந்த லிங்கத்தை பார்வதி பூஜித்ததென பல அற்புத நிகழ்வுகள் இந்நாளில்தான் நடந்தேறின.

 இன்றும் காசி, ஹரித்துவார் பகுதிகளில் மாலை நேரத்தில் தீபமேற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் வழக்கமிருக்கிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது வழக்கில் உள்ளது. தை மாதம் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் மகரஜோதி தரிசனம் கேரளத்தில் பிரசித்தம். சிவபெருமான் ஒளிமயமாகக் காட்சி தந்ததை காட்டும் விதம் திருவண்ணாமலை உச்சியில் ஏற்றும் மகாதீபம் அளப்பரியது. ஐந்தரை அடி உயர, அகல இரும்புக் கொப்பரையில் 2 ஆயிரம் கிலோ நெய்யிட்டு முப்பது மீட்டர் காடாத் துணி சுருட்டிச் செய்த திரி போட்டு அதன் மீது 2 கிலோ கற்பூரம் வைத்து ஏற்றுகிற இத்தீபம் 35 கிலோமீட்டர் தூரத்தை வெளிச்சக் காடாக்கி விடும்.

 நம்மூர்களில் காலை முதல் விரதமிருந்து மாலையில் பூஜை முடித்து வீடு முழுக்க வரிசையாக அகல் விளக்கேற்றி வைக்கும் அழகு அற்புதமானது. மொட்டை மாடி முதல், சுற்றுச் சுவர்கள் வரை இரவில் தெருக்கள் ஜொலிக்கும். மண் விளக்கு, பித்தளை, சர விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி வழிபடுவதும், மாவிளக்கு ஏற்றுவதும் இந்நாளில் சிறப்பானது. எனினும் கால ஓட்டத்தில் அலங்கார மெழுகு வர்த்திகளுக்குள் அடங்கி விட்டதில் வருத்தம். இருப்பினும், இருள் துரத்தும் இவ்வெளிச்ச தினம் நமக்குள் கொட்டும் குதூகலம் கொஞ்சமும் குறையவில்லை என்பதே உண்மை. 

 திறந்தவெளியில் பப்பாளி போன்ற மரத்தண்டை நிறுத்தி அதைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகள் கட்டி வைத்து இந்த ‘சொக்கப்பனை கொளுத்துதல்’ ஒவ்வொரு கிராமத்திலும் இந்நாட்களில் இப்போதும் நடக்கிறது. சொக்கப்பனைக்கு தீபாராதனை காட்டி அதைக் கொளுத்த பனை மட்டையில் படபட ஓசையுடன் பிடித்தெறியும் தீ, இன்றைய பட்டாசுகளை தோற்கடித்து விடும்!

Monday, 2 June 2014

வரலாற்று புகழ் மிக்க திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்-படங்கள்

அருள்மிகு திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13.6.2014 வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் இனிதே நிறைவு பெற உள்ளது .






Sunday, 13 April 2014

அனைத்து வாசகர்களுக்கும் மன அமைதியும் சந்தோசமும் நிறைந்த இனிய சித்திரை புதுவருட வாழ்த்துக்கள்

சித்திரை புத்தாண்டினை சிறப்பாக கொண்டாடும் அனைத்து வாசகர்களுக்கும் நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த வாழ்வு கிடைக்க எமது இணையத்தின் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.